பூனே மாவட்டம் இந்தாப்பூர் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், தங்களது 65 வயது தந்தை மற்றும் தாயை இரக்கமின்றி கட்டையால் தாக்கிய இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூனேவை சேர்ந்தவர் துக்காராம் கிசான் ரௌத் (வயது 65). விவசாயியான இவர், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6:30 மணி அளவில், தரங்வாடி பகுதியில் உள்ள சலீம் லான்ஸ் அருகில் தனது மனைவி அஞ்சனா ரௌத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கே டாடா நெக்சன் காரில் வந்த இவர்களது மகன்கள் சஞ்சய் துக்காராம் ரௌத் மற்றும் ராஜேந்திர துக்காராம் ரௌத் ஆகியோர், பெற்றோரை வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். தாயாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை விற்றது குறித்து பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அந்த நிலத்தைத் தங்களுக்குத் திருப்பித் தருமாறு மிரட்டியுள்ளனர்.
Humanity Shamed in #Maharashtra‘s #Indapur: Two Sons Booked for Assaulting Elderly Parents With Sticks Over Land Sale
An incident in which two sons allegedly assaulted their elderly parents with wooden sticks over the sale of land in their mother’s name took place at Tarangwadi… pic.twitter.com/3n0aXkShVj
— Siraj Noorani (@sirajnoorani) September 2, 2026
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரண்டு மகன்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மரக்கட்டைகளால் தங்களது தாய் மற்றும் தந்தையைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன், நிலத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் தந்தை துக்காராம் ரௌத்துக்கு முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாய் அஞ்சனாவுக்கு வலது மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் உண்டாயின. சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காயமடைந்த முதிய தம்பதியினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட துக்காராம் ரௌத் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சஞ்சய் மற்றும் ராஜேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சொத்துக்காகப் பெற்ற பெற்றோையே மகன்கள் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
