உத்தரப் பிரதேச மாநிலம் பல்யா பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கோர விபத்தால் சிறு வயதிலேயே ஒரு காலை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது ஆறு மாதக் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கடுமையான விபத்தில் மருத்துவர்களால் கால காப்பாற்ற முடியாத சூழ்நிலையில், ஏழ்மை நிலை காரணமாக மேல் சிகிச்சைக்குப் பணமின்றி அக்குடும்பம் தவித்தது. இருப்பினும், சுற்றியுள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்துத் தானும் படிக்க வேண்டும் என்ற கடும் ஆசையைக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, எனக்கும் படிக்க வேண்டும் என்று தனது தாயிடம் அழுது கூறி தனது கல்விக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினார் .

தற்போது தினமும் தனது பள்ளியை அடைவதற்காக ராகினி படும்பாடு காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தன்னிடம் உள்ள ஒரே ஒரு காலில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்குத் தாவித் தாவிச் சென்று அவர் பள்ளியை அடைந்து வருகிறார். இந்த ஆபத்தான மற்றும் கடினமான பயணத்தின் இடையே பலமுறை இளைப்பாறிச் செல்லும் அவர், சில நாட்களில் தனியாகவும் சில நாட்களில் குடும்பத்தினரின் துணையுடனும் பள்ளிக்குப் பயணம் செய்கிறார். அவளது குடும்பத்தின் வறுமை நிலையால் செயற்கைக் காலோ அல்லது முச்சக்கர வண்டியோ வாங்க முடியாததால், “டிஎம் அங்கிள், எனக்கு ஒரு ட்ரைசைக்கிள் தாருங்கள், நான் அதில் பள்ளிக்குச் செல்வேன்” என்று அந்தச் சிறுமி விடுத்த எளிய கோரிக்கை அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

இந்தச் சிறுமியின் துயரக்கதை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, பல தரப்பிலிருந்தும் உதவிகள் குவியத் தொடங்கின. இதற்கிடையே விவகாரத்தைக் கையில் எடுத்த ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் உடனடியாகத் தன் தரப்பினரை அனுப்பிச் சிறுமிக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். ராகினிக்கு உடனடியாக ஒரு சக்கர நாற்காலி மற்றும் 25,000 ரூபாய் நிதி உதவியை வழங்கிய அவர், விரைவில் சிறுமிக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.