உத்தரப் பிரதேசத்தின் ஏழ்மையான கிராமத்தில் இருந்து கார்ப்பரேட் வேலைக்காக பெங்களூரு நகருக்குச் சென்றுள்ள 25 வயது இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் சுயமாக சுமார் 50 லட்சம் ரூபாயைச் சேமித்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு பெரிய தொகையைச் சேமித்திருப்பது பலரின் பாராட்டைப் பெற்றிருந்தாலும், அந்த முழுப் பணமும் எந்தவித முதலீடுகளும் இன்றிச் சேமிப்புக் கணக்கிலேயே சும்மா கிடப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். எதிர்கால வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்பது குறித்தும், சரியான முதலீட்டு வழிகள் எவை என்பது குறித்தும் அவர் ரெடிட்  சமூக வலைதளத்தில் பொதுமக்களிடம் வெளிப்படையாக ஆலோசனை கேட்டுள்ளார்.

தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ள அந்த இளைஞர், சொந்த ஊரிலோ அல்லது நகரத்திலோ வீடு கட்டுவது மற்றும் விரைவில் திருமணம் செய்துகொள்வது போன்ற யோசனைகளில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது தங்கையின் திருமணத்திற்காக ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். மிக முக்கியமாக, நிறுவனத்தின் மூலமாகவழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டைத் தவிர்த்துத் தனக்கெனச் சொந்தமாக எத்தகைய உயிர் அல்லது மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளையும் அவர் இதுவரை வைத்திருக்கவில்லை என்பதும் ரெடிட் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

இளைஞரின் இந்தச் பதிவைக் கண்ட ஏராளமான நெட்டிசன்கள் தங்களது பலதரப்பட்ட ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசி வருகின்றனர். ஒரு இரவுத் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கடனாளியாகி வாரியிறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வரவிருக்கும் காலங்களில் செல்வம் பெருகும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் தீவிரமாக முதலீடு செய்யுமாறும் பயனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அதிக வரியைக் கட்டாமல் தவிர்க்கும் பொருட்டு, தற்காலிகமாக அந்தத் தொகையை அர்பிட்டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்து பயன்பெறுமாறும் பலரும் தங்களது நிபுணத்துவ ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ளனர்.