இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், கோவாவில் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அவரது குடும்பத்தினர் மீதான பொதுமக்களின் கவனம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, சாராவின் சமூக வலைதளப் பதிவுகள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கோவாவிலிருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ இணையவாசிகளிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

கோவாவின் தெருக்களில் சாரா தனது நண்பர்களுடன் நடந்து செல்லும் காட்சியை வழிப்போக்கர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவில், சாரா சிவப்பு நிற மலர் வேலைப்பாடுகள் கொண்ட ஆடையணிந்து கையில் பாட்டில் ஒன்றை ஏந்தியபடி தனது நண்பர்களுடன் இயல்பாக நடந்து செல்கிறார்.

 

அவர் கையில் வைத்திருந்தது பீர் பாட்டில் எனச் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், “அவர் ஒரு வளர்ந்த நபர்; தனது தனிப்பட்ட விடுமுறை காலத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பது அவரது உரிமை” என மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

விளையாட்டு அல்லது திரைத்துறை என எதிலும் சாராத சாரா டெண்டுல்கர், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். லண்டனில் ஊட்டச்சத்து துறையில் (Nutrition) முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.\

மேலும் சொந்தமாக ‘பிலேட்ஸ்’ (Pilates) ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வரும் அவர், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த முதலீடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தன்னுடைய எளிமைக்காகப் பலமுறை பாராட்டுகளைப் பெற்றுள்ள சாரா குறித்து, தற்போது எழுந்துள்ள இந்த விவாதம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது