இந்திய கிரிக்கெட் அணி விரைவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20  தொடரில் களமிறங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ  சமீபத்தில் அறிவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காரணம், அணியில் இடம்பிடித்துள்ள சில வீரர்களின் உடல் தகுதி மற்றும் ஃபார்ம் குறித்த கேள்விகள்தான்!

அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 4 வீரர்கள் முழுமையான உடல் தகுதியுடன் இல்லை என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காயம் அல்லது முழுமையற்ற பிட்னஸ் பிரச்சினைகளில் இருக்கும் இவர்களுக்கு அணியில் எப்படி இடமளிக்கப்பட்டது என்ற கேள்வி இப்போது பலமாக எழுந்துள்ளது. முழுமையாகத் தகுதியுடன் இருப்பவர்களை விட்டுவிட்டு, சந்தேகத்திற்குரிய பிட்னஸ் கொண்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற நியாயமான கேள்வி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மிகப்பெரிய விவாதமாக வெடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக T20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் க்ருணால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடர்களில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

ஐபிஎல் 2026 சீசனில் கூட 37.66 சராவரியுடன் 226 ரன்களைக் குவித்ததோடு, 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினார். உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் கலக்கி வரும் இவ்வளவு திறமையான ஒரு வீரரை ஓரங்கட்டிவிட்டு, பிட்னஸ் மற்றும் மோசமான ஃபார்மில் தத்தளிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது ஏன் என்ற கேள்விக்கு தேர்வுக் குழுவிடம் இருந்து பதில் இல்லை.

ஒருபுறம் க்ருணால் புறக்கணிக்கப்பட்டாலும், மறுபுறம் தொடர்ந்து படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வாஷிங்டன் சுந்தருக்கு அணி நிர்வாகம் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அவரது சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளன: கடந்த 7 சர்வதேசப் போட்டிகளில் சுந்தரால் வீழ்த்தப்பட்டது ஒரே ஒரு விக்கெட் மட்டும்தான். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் கடந்த 5 இன்னிங்ஸ்களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

இத்தகைய மோசமான ஃபார்மிலும், முழுமையற்ற பிட்னஸ் நிலையிலும் இருக்கும் வாஷிங்டன் சுந்தரை  அஜித் அகர்கர் தலைமையிலான குழு மீண்டும் தேர்வு செய்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி விவரம்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.