அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன், ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைமை செயல் அலுவலராக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி மாறிய சில நாட்களிலேயே அவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபகாலமாக தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தங்களது தாய் கட்சியிலிருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் இந்த கட்சித் தாவல் ஓயாமல் தொடர்கிறது. தற்போது அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பல மூத்த தலைவர்களும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மண்டலச் செயலாளராகப் பணியாற்றிய சிங்கை ராமச்சந்திரன், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்நிலையில், தமிழக அரசுத் துறை சார்ந்த ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.