தமிழக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மகப்பேறு விடுப்பு தொடர்பான மிக முக்கிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கர்ப்பம் மற்றும் பிரசவக் காலத்தில் தாயையும் சேயையும் சிறப்பாகப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாகத் தமிழக அரசு ஊழியர்களான பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களாக இருந்து, பின்னர் 6 மாதங்களாகவும் 2017-ஆம் ஆண்டில் 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள பெண் ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் 365 நாட்கள் (1 வருடம்) விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனை 365 நாட்களாக உயர்த்த வேண்டும் எனப் பெண் ஊழியர்கள் தரப்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
பெண் ஊழியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, சட்டமன்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தபடி, தற்போது மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை உறுதி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அரசாணையின் படி, அரசுப் பணியில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிகப் பெண் ஊழியர்கள் இருவரும் இச்சலுகையைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர். பிரசவத்திற்கு முன்போ அல்லது பின்பையோ இந்தப் 365 நாட்கள் விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
