கண்ணாடி அணிபவர்கள் லென்ஸில் அழுக்கு அல்லது கைரேகை படியும்போது யோசிக்காமல் அணியும் சட்டையின் ஓரத்தைப் பயன்படுத்தித் துடைப்பது வழக்கமான ஒன்றாகும். இது சாதாரண பழக்கமாகத் தோன்றினாலும், நாளடைவில் கண்ணாடியின் தரத்தை முற்றிலுமாகச் சேதப்படுத்திவிடும் என்று கண் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் அணியும் உடைகள் மென்மையானதாக இருந்தாலும், நாள் முழுவதும் அவற்றின் மீது கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணிய தூசித் துகள்கள் ஒட்டிக்கொள்கின்றன. சட்டையால் துடைக்கும்போது இந்தத் துகள்கள் லென்ஸின் மீது உராய்கின்றன. தொடர்ந்து இவ்வாறு துடைப்பதால் லென்ஸில் ஆயிரக்கணக்கான நுண் கீறல்கள் உருவாகிப் பார்வை தெளிவைக் குறைத்து, கண் சோர்வை ஏற்படுத்துகின்றன.
தற்போது வரும் கண்ணாடிகளில் புளூ-லைட், UV பாதுகாப்பு மற்றும் பிரதிபலிப்பு எதிர்ப்பு எனப் பலவிதமான பாதுகாப்புப் பூச்சுகள் செய்யப்படுகின்றன. பொருத்தமற்ற துணிகளைக் கொண்டு உலர்வாகத் துடைக்கும்போது இந்தச் சிறப்புப் பூச்சுகள் படிப்படியாகச் சேதமடைகின்றன. ஒருமுறை இந்த அடுக்குகள் பாதிக்கப்பட்டால் அதைச் சரிசெய்ய முடியாமல் புதிய லென்ஸை மட்டுமே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
பிரபல லென்ஸ் தயாரிப்பு நிறுவனமான ZEISS மற்றும் ஆய்வு இதழ்களின் கூற்றுப்படி, சாதாரண துணிகளால் தொடர்ந்து துடைக்கும்போது லென்ஸின் மேற்பரப்பில் தீவிரமான சேதங்கள் ஏற்படுகின்றன. அதற்கு மாறாக, மைக்ரோஃபைபர் துணிகளைப் பயன்படுத்தும்போது குறைந்த உராய்வுடன் லென்ஸில் உள்ள அழுக்குகள் மிகத் திறம்பட அகற்றப்படுகின்றன.
கண்ணாடியை எப்போதும் உலர்வாகத் துடைக்காமல், முதலில் நீரில் கழுவிவிட்டே துடைக்க வேண்டும். லென்ஸ் கிளீனர் அல்லது மிதமான சோப் பயன்படுத்திக் கழுவிய பிறகு, பிரத்யேக மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு மென்மையாகத் துடைப்பதே கண்ணாடியின் தரத்தையும் பார்வையின் தெளிவையும் நீண்ட காலம் பாதுகாக்கச் சரியான வழிமுறையாகும்.
