கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை கிருஷ்ணா தொடர்பு கொண்டு பேசினார்.

மறுமுனையில் பேசிய நபர் பணம் செலுத்தி நாங்கள் தரும் பணிகளை செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி கிருஷ்ணா 11 லட்சத்து 6 ஆயிரத்து 640 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.