உலகம் முழுவதும் மிக உயரிய கௌரவமாக கருதப்படும் நோபல் பரிசுகள், 2025-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது. இன்று வெளியான அறிவிப்பில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

வெனிசுலாவில் ஜனநாயகக் குரலை எழுப்பி, அதற்காக அந்நாட்டின் அதிகாரப் பின்னணியை எதிர்த்தமைக்கு மரியாவுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகில் இடம்பெற்ற 7 முக்கிய போர்களை தடுக்க தானே காரணம் என பெருமைபட சொல்லியிருந்தார். மேலும், அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவராக தன்னை கருதி, காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நோபல் கமிட்டி மரியாவை தேர்வு செய்ததால், ட்ரம்ப் எதிர்பார்ப்பு தவறிய நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் “அமைதியை விட அரசியலே முக்கியம்” என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், மரியா கொரினா மச்சாடோ வெளியிட்ட உரையில், “நான் பெற்றுள்ள அமைதிக்கான நோபல் பரிசை, ட்ரம்ப் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

வெனிசுலாவை ஆழ்ந்த நெருக்கடியிலிருந்து மீட்டதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை மறக்க முடியாது,” என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மரியா எனது சார்பாக நோபல் பரிசை பெற்றதாக கூறியிருக்கிறார். ஆனால் நான் அவரிடம் இதுபற்றி எதுவும் கேட்கவில்லை.

எனது செயல்கள் எப்போது பாராட்டப்படுகிறதோ அது போதும். வெனிசுலா மக்களுக்கு நான் செய்த உதவிகள் என் மனதை மகிழ்விக்கின்றன,” என தெரிவித்துள்ளார். மரியா – ட்ரம்ப் இடையிலான இந்த பரஸ்பர மரியாதை, உலக அரசியலில் புதுமையான சிந்தனையை ஏற்படுத்தி இருக்கிறது.