ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் புரட்சிகர ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளின் இருபது சதவீத எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் ஈரான் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆசிய நாடுகளுக்கான தங்க ஏற்றுமதியின் முக்கிய மையமாகத் திகழும் துபாயிலிருந்து மற்ற நாடுகளுக்குத் தங்கத்தை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் புதிய வர்த்தகங்கள் முடங்கியுள்ளன.

வான்வழிப் போக்குவரத்து பாதிப்பால் துபாயில் தங்கம் பெருமளவில் தேக்கமடைந்துள்ள நிலையில் அங்குள்ள வர்த்தகர்கள் விலையில் பெரும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். உலகளாவிய தங்கம் மற்றும் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற சூழலால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் சேமிப்பை அதிகரிக்கவும் வர்த்தகர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி உலகளாவிய அளவுகோல் விலையிலிருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு முப்பது அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் இரண்டாயிரத்து எழுநூறு ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் பதற்றம் காரணமாகத் தங்கம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் துபாயில் தங்கம் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவது சர்வதேச வர்த்தகர்களிடையே பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.