ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தொடங்கிய போர், இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் திடீர் தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (சிங்கத்தின் கர்ஜனை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 அதிநவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில், தெஹ்ரானில் நிலத்திற்கு அடியில் காமேனி பதுங்கியிருந்த ரகசிய இடத்தை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தகர்த்துள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் வீடியோ காட்சிகளை இஸ்ரேல் தற்போது வெளியிட்டுள்ளது. காமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டதை அந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.
தங்கள் நாட்டின் உச்சபட்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
இஸ்ரேலிய நகரங்களை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைத்தளங்களையும் ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இருதரப்பிலும் இடைவிடாது நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதலால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் போர் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. உலக நாடுகள் இந்தப் போரைக் கவலையுடன் கவனித்து வருகின்றன.
