ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் குறித்து பெண் ஜோதிடர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
வைதீக ஜோதிடம் மற்றும் வாஸ்து நிபுணரான அந்தப் பெண், தனது சமூக வலைதளப் பதிவில் அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்று கணித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் இப்போதே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குறைந்தது 1 முதல் 2 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள், கைவசம் ரொக்கப் பணம், மருந்துகள் மற்றும் சூரியசக்தி (Solar) சார்ஜர்களைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஈரானைத் தொடர்ந்து அடுத்ததாக பாகிஸ்தானின் முறை வந்துவிட்டதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணிப்பிற்கு ஆதாரமாக சில ஜோதிடக் காரணங்களை அவர் முன்வைத்துள்ளார். அதாவது அந்த நாளில் ‘ரிக்த திதி’ அமைவதாகவும், ரமலான் மாதம் முடிந்து நவராத்திரி தொடங்கும் காலம் (மார்ச் 19) என்றும் அவர் கூறுகிறார். ஜாதகத்தின் 4-வது வீட்டில் புதன், ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் ‘அங்காரக யோகம்’ உருவாகிறது. 5-வது வீட்டில் சூரியன், சனி, நெப்டியூன் மற்றும் சுக்கிரன் ஒன்றாக இணைகின்றனர்.
விருச்சிக லக்னம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் அமையும் இந்த கிரக நிலைகள் மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் விளக்கியுள்ளார்.
நாட்டின் தற்போதைய திசை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகத்தையும் அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். செவ்வாய் மகாதிசையில் ராகு அந்தர்திசை நடப்பது அதிரடி முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும், 2026 மார்ச் 21-ஆம் தேதி வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய எல்லைகள் மாறும் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீண்டும் இந்தியாவுடன் இணைவதற்கான தொடக்கமாக இது இருக்கும் என்றும் அவர் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த ஜோதிடருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “வெறும் பார்வையாளர்களைப் பெறுவதற்காகவும், வைரல் ஆவதற்காகவும் மக்களிடையே தேவையற்ற பயத்தை விதைக்க வேண்டாம்” என இணையவாசிகள் சாடி வருகின்றனர். மேலும் ஜோதிட ரீதியான இத்தகைய கணிப்புகள் வெறும் யூகங்களே தவிர, அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
