கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சையின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மொத்த ஊதியத் தொகுப்பை சுமார் 692 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,361 கோடி) உயர்த்தி அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் அதிக ஊதியம் பெறும் சிஇஓ-க்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார்.
சுந்தர் பிச்சைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதியத்தில் பெரும் பகுதி ‘பெர்பார்மன்ஸ் ஸ்டாக் யூனிட்கள்’ (PSUs) எனப்படும் நிறுவனப் பங்குகளாக வழங்கப்பட உள்ளன.
இதன் அடிப்படை மதிப்பு 126 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பபெட்’, மற்ற எஸ்&பி 100 (S&P 100) நிறுவனங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டால், இந்த ஊதியம் இரண்டு மடங்காக, அதாவது 252 மில்லியன் டாலராக அதிகரிக்கும்.
அதே சமயம், நிறுவனத்தின் செயல்பாடு குறைந்தால் இந்தத் தொகை பூஜ்யமாக குறையவும் வாய்ப்புள்ளது. இது தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில் 84 மில்லியன் டாலர் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பங்குகளையும் ஆண்டுச் சம்பளமாக 2 மில்லியன் டாலரையும் (சுமார் ரூ.18 கோடி) அவர் பெறுவார்.
இந்த முறை புதிய முயற்சியாக, கூகுளின் தன்னாட்சி கார் நிறுவனமான ‘வேய்மோ’ (Waymo) மற்றும் ட்ரோன் டெலிவரி நிறுவனமான ‘விங்’ (Wing) ஆகியவற்றின் வளர்ச்சியுடன் தொடர்புடைய 350 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு ஊக்கத்தொகையும் பிச்சைக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிறுவனங்கள் இலக்கை எட்டினால், சுந்தர் பிச்சையின் மொத்த ஊதியம் 692 மில்லியன் டாலரைத் தொடும்.
2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூகுள் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றபோது, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 535 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அது சுமார் 7 மடங்கு உயர்ந்து 3.6 டிரில்லியன் டாலராக (கடந்த ஜனவரியில் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டது) அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சியால் 53 வயதான சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. ‘ஃபோர்ப்ஸ்’ இதழின் படி, அவரது தற்போதைய சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12,500 கோடி) ஆகும். மேலும், அவரும் அவரது மனைவி அஞ்சலியும் இணைந்து சுமார் 498 மில்லியன் டாலர் மதிப்பிலான கூகுள் பங்குகளை வைத்துள்ளனர்.
சமீபத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கிற்கு 10 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் வரை கிடைக்கக்கூடிய ஊதியத் திட்டத்திற்குப் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்திருந்தது உலகளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
