மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த மைனர் சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பேன்சி கடையில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று கடையில் மற்ற ஊழியர்கள் வெளியில் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த மாரி (23) என்ற வாலிபர் கடைக்குள் நுழைந்துள்ளார். சிறுமி வியாபார கவனிப்பில் இருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவர் கழுத்தில் வாலிபர் திடீரென தாலியைக் கட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

​இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், இச்சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, வீட்டில் பதுங்கியிருந்த வாலிபர் மாரியை காவல் துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். மைனர் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக, அவர் மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் பெண்களைத் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.