பெங்களூருவில் குடும்பச் சண்டை காரணமாகப் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஊர்க்காவலர் மனைவியைச் சமாதானம் செய்யச் சென்று, அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பது போல் நடித்து, கத்தியால் 8 முறை குத்திக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்!” என்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காவல் நிலையத்தில் ஊர்க்காவலராகப் பணியாற்றி வந்த 34 வயதான மஞ்சுளா, தனது கணவர் பிரதீப் குமாரின் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால், கடந்த ஒரு மாதமாக பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்ற பிரதீப் குமார், மஞ்சுளாவைத் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் மறுக்கவே, திடீரென மஞ்சுளாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுளாவை சரமாரியாகக் குத்தியுள்ளார்;

இதனைத் தடுக்க முயன்ற 14 வயது மகளின் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மஞ்சுளா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், பிரதீப் குமார் காவல்துறையினருக்குத் தானே போன் செய்து கொலையை ஒப்புக்கொண்டு, தனது மணிக்கட்டை அறுத்துத் தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

15 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை சந்தேகப் புத்தியாலும் ஆன்லைன் சூதாட்டத்தாலும் ரத்தக் கறையோடு முடிவுக்கு வந்த இந்தச் சம்பவம் ஆன்லைன் வாசகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.