மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மிக உயரமான இரும்புக்கம்பத்தின் உச்சிக்கு லாவகமாக ஏறி, அங்கே ஆபத்தான முறையில் பல விதமான உடற்பயிற்சி சாகசங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் செய்யும் இந்த விபரீத ஸ்டண்ட்டை கீழே நின்றுகொண்டு மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பார்ப்பதற்கே நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ள இந்தச் செயல் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்து வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் கலவையான விமர்சனங்களையும், கிண்டலான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதைக் கண்டு வியந்து நகைச்சுவையான மீம்களைப் பகிர்ந்துள்ளதுடன் எளிய முறையில் இணையத்தில் பிரபலமடைய இளைஞர்கள் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதாக பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

 

எனினும், இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் லைக்ஸுக்காக உயிரைப் பணையம் வைக்கும் இத்தகைய ஆபத்தான செயல்களுக்கு கடுமையான கண்டனங்களும் எழுந்துள்ளன. எந்தவித கயிர் பாதுகாப்பும், ஹெல்மெட்டும் இல்லாமல் இவ்வளவு உயரத்தில் செய்யப்படும் சாகசங்கள் சிறு தவறு நடந்தாலும் மரணத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்று நிபுணர்களும் பொதுமக்களும் எச்சரிக்கின்றனர்.

இந்த வீடியோ கொல்கத்தாவில் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், அந்த வாலிபருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டதா அல்லது காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பது பற்றியும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் லைக்ஸும் வியூஸும் மட்டுமே பிரதானமாகிவிட்ட இன்றைய சூழலில், இது போன்ற விபரீத சாகசங்கள் அப்பாவி மக்களின் உயிரையும் கேள்விக்குறியாக்குகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் தீவிரமான கவலையாக உள்ளது.