குழந்தை பிறந்த பிறகு அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான உணவு தாய்ப்பால்தான். ஆனால், தாய்மார்களுக்குக் காய்ச்சல், சளி அல்லது இருமல் ஏற்படும் போது, “தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கும் நோய் பரவுமா?” என்ற பயத்தில் பலரும் தாய்ப்பாலை நிறுத்திவிடுகின்றனர். ஆனால், சாதாரண காய்ச்சல் இருக்கும் போது தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை என்பதே உண்மை.

உண்மையில், காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல; அது உடலில் உள்ள தொற்றை எதிர்த்துப் போராடும் அறிகுறி மட்டுமே. தாயின் உடலில் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் நுழையும் போது, அதை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்புச் சக்தியை உடலே உருவாக்கத் தொடங்குகிறது. இந்த நோய் எதிர்ப்புச் சக்தி தாய்ப்பாலின் வழியாகக் குழந்தைக்கும் சென்று சேர்வதால், தாய்ப்பால் குழந்தைக்கு ஒரு இயற்கையான பாதுகாப்பு கவசமாகச் செயல்படுகிறது.

இருப்பினும், தாய்க்கு காய்ச்சல் இருக்கும் போது சில எளிய சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும். குழந்தையைத் தொடுவதற்கு முன்பும், பாலூட்டுவதற்கு முன்பும் கைகளைக் கழுவ வேண்டும். இருமல் அல்லது சளி இருந்தால் முகக்கவசம் அணிவது நல்லது. இது மூச்சுத் துளிகள் மூலம் கிருமிகள் குழந்தைக்குப் பரவாமல் தடுக்க உதவும். மேலும், தாய்மார்கள் போதுமான தண்ணீர் குடித்து, நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு ஓய்வு எடுப்பது அவசியமாகும்.

“காய்ச்சல் வந்தால் பால் விஷமாகிவிடும்” அல்லது “மருந்து சாப்பிடும் போது பால் கொடுக்கக் கூடாது” என்பவை முற்றிலும் தவறான நம்பிக்கைகளாகும். சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் பெரும்பாலான மருந்துகள் பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பானவையே. அரிதாகச் சில தீவிரமான நோய்த்தொற்றுகள் அல்லது குறிப்பிட்ட வீரியமிக்க மருந்துகள் உட்கொள்ளும் போது மட்டுமே மருத்துவர்கள் தாய்ப்பாலைத் தற்காலிகமாக நிறுத்தக் கூறுவார்கள்.

உலக சுகாதார அமைப்பும் குழந்தை நல மருத்துவர்களும் தாய்ப்பாலைக் குழந்தையின் “முதல் தடுப்பூசி” என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, தேவையற்ற பயம் அல்லது தவறான வதந்திகளை நம்பி தாய்ப்பாலை நிறுத்தக் கூடாது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவதே குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பாதுகாப்பானது.