இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா, நாட்டில் விற்பனையில் உள்ள 10 வகையான கண் சொட்டு மருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த மருந்துகளில் மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், திரும்பப் பெறப்பட்ட மருந்துகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கையிருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட பட்டியலில் டிபோப்ரெட், பிரினோலார், பிரின்சோடிம், லோட்டெப்ரெட், நேபாலேக்ட் மற்றும் டோபா-எஃப் உள்ளிட்ட முக்கியக் கண் சொட்டு மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இவை பொதுவாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, குளுகோமா, கண் தொற்று மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவை ஆகும்.

இந்த மருந்துகளைத் தற்போது பயன்படுத்தி வரும் நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையின்றி சிகிச்சையைத் திடீரென நிறுத்தவோ அல்லது அந்த மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் உடனடியாகத் தங்கள் கண் மருத்துவரை அணுகி, அதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டிய மாற்று மருந்துகளைப் பெற வேண்டும்.

நோயாளிகளின் பாதுகாப்பிற்கே முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள சன் பார்மா நிறுவனம், தரமான மருந்துகள் மீண்டும் விரைவாகச் சந்தைக்குக் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறியுள்ளது.