உலக தாய்ப்பால் வார விழா அனுசரிக்கப்பட்டு வரும் இந்த வேளையில், குழந்தையின் ஆரோக்கியம் குறித்த பல விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பண்டைய ஆயுர்வேத மருத்துவம் முதல் இன்றைய நவீன மருத்துவ அறிவியல் வரை அனைத்துமே தாய்ப்பாலை ஒரு ‘அமிர்தம்’ என்றே போற்றுகின்றன. பிறந்தது முதல் ஒரு குழந்தைக்குத் தேவையான மிக முக்கிய உணவாக தாய்ப்பால் திகழ்கிறது. தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ந்த பிறகும், தாய்ப்பாலை ஆய்வகத்தில்  செயற்கையாக உருவாக்க முடியாதது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுவது உண்டு.

கடந்த பல தசாப்தங்களாகவே உலகின் முன்னணி விஞ்ஞானிகள் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு திரவத்தை லேப்பில் உருவாக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவை அனைத்துமே தோல்வியிலேயே முடிந்துள்ளன. தாய்ப்பாலில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமே இருப்பதாக நாம் நினைக்கிறோம்; ஆனால் அதையும் தாண்டி, அதில் ஆயிரக்கணக்கான உயிருள்ள செல்கள் , ஆன்டிபாடிகள்  மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள்  நிறைந்துள்ளன.

ஒரு தாய் தனது குழந்தைக்குப் பாலூட்டும்போது, குழந்தையின் உமிழ்நீருக்கு ஏற்பத் தாயின் உடல் அந்த நொடியிலேயே பாலிலுள்ள சத்துக்களின் அளவை மாற்றியமைக்கிறது. அதாவது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அதை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை தாய்ப்பால் தானாகவே அதிகரித்து சுரக்கிறது. இந்த இயற்கையான ‘ஸ்மார்ட் ரெஸ்பான்ஸ்’ மைப்பை எந்தவொரு செயற்கை ஆய்வகத்தாலும் அல்லது அதிநவீன தொழில்நுட்பத்தாலும் இதுவரை உருவாக்கவே முடியவில்லை.

செயற்கைப் பால் பவுடர்கள் சந்தையில் கிடைத்தாலும், அவை தாய்ப்பாலின் அடிப்படை ஊட்டச்சத்தை மட்டுமே ஈடுசெய்ய முயல்கின்றனவே தவிர, தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியையோ அல்லது தாய்க்கும் குழந்தைக்குமான அந்த உணர்வுபூர்வ பிணைப்பையோ வழங்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், இயற்கை மனித உடலுக்கு அளித்த மிகப்பெரிய பொக்கிஷமான தாய்ப்பாலை, அறிவியலால் நகலெடுக்கவே முடியாது என்பதை இந்த ஆராய்ச்சித் தோல்விகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன.