உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் கள்ளக்காதலால் மனம் உடைந்த கணவன் ஒருவர், தினசரி சண்டைகளைத் தவிர்க்கும் பொருட்டு தானே முன்னின்று மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் டேவரி கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தி ராம் நிஷாத். இவருக்கும் ஃபுல்மதி என்பவருக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. தம்பதியருக்கு தற்போது ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.

குடும்பம் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், சமீபகாலமாக ஃபுல்மதிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரையும் ஐந்து குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு, ஃபுல்மதி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளார்.

மனைடியின் திடீர் முடிவால் அதிர்ந்துபோன குடும்பத்தினரும் கிராம மக்களும் இணைந்து, பெண்ணை எப்படியோ பேசி சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இருப்பினும், வீடு திரும்பிய பின்னரும் கணவன்-மனை இடையே நாளும் சண்டையும் சச்சரவுகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. தினசரி நடக்கும் குடும்பக் கலவரத்தாலும், மன உளைச்சலாலும் நொந்துபோன கணவன் புத்தி ராம், இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். மனைவியின் மனதை மாற்ற முடியாததால், அவரது விருப்பப்படியே அவளது காதலனுடன் சேர்த்து வைக்க கிராமத்தினர் முன்னிலையில் அதிரடி முடிவு எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரு  கோயிலில் வைத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தனது மனைவி ஃபுல்மதிக்கும், அவரது காதலன் அவதேஷுக்கும் புத்தி ராம் திருமணம் செய்து வைத்தார். பின்னர் இருவரையும் மனதார வாழ்த்தி விடைக்கொடுத்தும் அனுப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கணவன் புத்தி ராம், “எனக்கு பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைபட்டு சாக விருப்பமில்லை, எனக்கு நிம்மதியாக வாழ ஆசை இருக்கிறது. 21 ஆண்டுகளுக்கு முன்பு நானும் காதல் திருமணம் செய்தவன்தான். ஆனால், அவளுக்கு எங்களது பாசத்தைவிட காதலன் மீதுதான் நாட்டம் அதிகமாக இருந்தது. என் மனைவியின் மகிழ்ச்சியில்தான் என் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.தற்போது இந்த விசித்திரமான மற்றும் துணிச்சலான திருமணம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.