பீகார் மாநிலம் அரரியா மாவட்டம் ஹையாசார் கிராமத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று காலை 29 வயது இளம் பெண் ஜூமனி தனது வீட்டு அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். கழுத்து அறுபட்டு அவர் கிடந்த கோலத்தைப் பார்த்த ஊரே அதிர்ந்துபோனது. உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட, அவர்களும் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
இந்தக் கொடூரக் கொலைக்கு ஆரம்பத்தில் காரணமாகச் சொல்லப்பட்டது ஒரு சிறிய தகராறு. கொலை நடப்பதற்கு முந்தைய நாள், ஜூமனியின் நெல் வயலுக்குள் அண்டை வீட்டைச் சேர்ந்த மொஹம்மது அஜீஸின் மகன் தஹிப்பின் ஆடு புகுந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அண்டை வீட்டுக்காரர் தஹிப் கத்தியுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், “கண்டிப்பாக அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும்” என்று ஒட்டுமொத்த கிராமமும், ஏன் குடும்பத்தினரும் கூட உறுதியாக நம்பினர். காவல்துறையும் அந்த கோணத்திலேயே விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
மகள் இறந்த துக்கத்தில் தந்தை மொஹ்சின் காவல் நிலையம் மற்றும் பிரேதப் பரிசோதனை வேலைகளில் மும்முரமாக இருந்தார். ஆனால், அன்றைய தினம் மாலை தாமதமாக வீடு திரும்பிய அவரிடம், அவரது மனைவி பாத்திமா கூறிய உண்மைகள் அவரை உறைய வைத்தது.
பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட அந்தச் சண்டையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த தாய் பாத்திமாவும், இளைய மகள் ஆசியாவும் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொலை வழக்கில் மாட்டி விட்டால் நம் பகையைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் திட்டம் போட்டனர்.
அதன்படி, நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, தன் சொந்த மகளான ஜூமனியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, சாதாரணமாக வெளியே வந்து படுத்துத் தூங்கியுள்ளனர். விடிந்ததும் அண்டை வீட்டார் மீது பலிகடா ஆக்கும் வகையில் நாடகமாக அழுது கூச்சலிட்டுள்ளனர். மனைவி சொன்ன இந்தக் கதையைக் கேட்டு உறைந்துபோன தந்தை மொஹ்சின், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று உண்மையை கூறினார்.
தந்தையின் இந்த அதிரடித் தகவலால் அதிர்ந்துபோன காவல்துறையினர், உடனடியாகத் தாய் பாத்திமா மற்றும் தங்கை ஆசியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் பிடியில் சிக்கியதும் இருவரும் தாங்கள்தான் இந்தக் கொலையைச் செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களைச் சிக்க வைக்க, ஈவு இரக்கமின்றிச் சொந்த மகளின் உயிரையே எடுத்த தாயும் தங்கையும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களைத் தூங்க விடாமல் அதிரச் செய்துள்ளது.
