காவிரி நதிநீர் உரிமையைப் பெற ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் குரல் கொடுக்காத சூழலில், நடிகை திரிஷா தொடர்பான விவகாரத்துக்காக மட்டுமே இரு கட்சிகளும் சண்டையிட்டுக் கொள்வதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பருவமழை பொய்த்து, அணைகளின் நீர்மட்டம் குறைந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையிலும், தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை மதிக்காமல் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய நீரைப் பெற வேண்டிய தற்போதைய சூழலில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இதில் கவனம் செலுத்தவில்லை. தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை, இயல்பான அளவான   குறைந்து, மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதிலும் உள்ள அணைகளின் கொள்ளளவு இந்த ஆண்டு 31.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த 30 நாட்களில் மட்டும் ஒரு மூட்டை அரிசி விலை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு பற்றி எரிந்தாலும் சரி, போராட்டக் களமாக மாறினாலும் சரி, முதல்வருக்கு கோபம் வருவதில்லை. ஆனால், பெண்களை இழிவுபடுத்தி யாராவது பேசினால் மட்டும் உடனே நடவடிக்கை பாய்கிறது. மொத்தத்தில் காவிரி தண்ணீருக்காக சண்டை போடுவார்கள் என்று பார்த்தால், திரிஷா அண்ணி  விவகாரத்துக்காகத் தான் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சண்டையிட்டுக் கொள்கின்றன என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

தமிழக நீர்வளத் துறையின் கீழ் பாலாறு, காவிரி, பரம்பிக்குளம், வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய நதிகள் மற்றும் 90 அணைகளின் கீழ் 14,141 பாசன ஏரிகளும், உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் உள்ளன. இவற்றின் மூலமாகவே உள்ளூர் வேளாண் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

தற்போதைய சூழலில் மழை பொய்த்திருப்பதாலும், உரிய நீர் கிடைக்காததாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களை விட்டுவிட்டு, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காகவும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.