காவிரி பிரச்சினையை சட்டப்பேரவையில் திமுக எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, தஞ்சை ஆர்ப்பாட்ட உரையைத் திரித்து அரசு திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, திமுக தலைவரின் உத்தரவின்பேரில், தஞ்சாவூரில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகள் குறித்து மட்டுமே நான் விரிவாகப் பேசினேன்.

நான் எந்தப் பெண்ணையும் தவறாகப் பேசவில்லை. தவறான எண்ணத்தில் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற நோக்கம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆர்ப்பாட்டத்தில் நான் பேசியதில் எந்த இரட்டை அர்த்தமும் இல்லை; தெளிவாகவே பேசினேன், இனிமேலும் பேசுவேன்.

 

ஆனால், நான் பேசாத ஒன்றை ‘கட்-காபி’ செய்து, திட்டமிட்டுத் திரித்து காணொலியாகப் பரப்பியுள்ளனர். சில தலைவர்கள் உண்மைத் தன்மையை ஆராயாமல் எனக்குக் கண்டனம் தெரிவித்தது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் எனது தாயாகவும், சகோதரியாகவும் தான் பார்க்கிறேன்.

காவிரிப் பிரச்சினையை வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்கட்சி சார்பில் நாங்கள் எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த அரசு இத்தகைய திசைதிருப்பல் காரியங்களில் இறங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக என்னை ஒரு தீவிரவாதியைப் போல 400 கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் சென்று, செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அரசின் இந்த அடக்குமுறைக்கும், தரம் குறைந்த கைது நடவடிக்கைக்கும் நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

அரசு பொய் வழக்குகளைப் போட்டு பயமுறுத்தப் பார்க்கிறது. வழக்கு போட்டால் பயந்து ஓடிவிட நான் ஒன்றும் முதலமைச்சர் போல் ஓடுகாலி அல்ல. இதே திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் புறமுதுகு காட்டி ஓடியது போல, நானும் பயந்துவிடுவேன் என நினைக்கிறார்கள். அரசின் இந்த பொய் வழக்கைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.