சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டம் மர்காடோலா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஹலால் கோர் ஜுரி என்பவர் தனது விவசாய நிலத்தின் அருகே அமர்ந்திருந்தபோது, திடீரென அங்கு வந்த காட்டுப்பகுதிக்குள் இருந்து வந்த ஒரு தாய் கரடி அவர் மீது கண்மூடித்தனமாக பாய்ந்துள்ளது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தங்கை சமாரோன் பாய், தனது அண்ணனைக் காப்பாற்ற முயன்றபோது அந்த கொடூர கரடி அவரையும் விட்டுவைக்காமல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தத் திடீர் மற்றும் எதிர்பாராத தாக்குதலில் அண்ணன் மற்றும் தங்கை இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த மற்றொரு தங்கை கோரின் பாய் மீதும் அந்த வெறிபிடித்த கரடி தாக்குதல் தொடுத்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் மீட்டு, உடனடியாக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்ற முயன்ற வனத்துறையினருக்குப் பெரும் சவாலாக அந்தத் தாய் கரடி மாறியது. யாரையும் அருகில் நெருங்க விடாமல், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அந்தச் சடலங்களை கரடி சுற்றிவந்து நோண்டியது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ராய்ப்பூரைச் சேர்ந்த சிறப்பு வனத்துறை குழுவினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி அந்த கரடியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அதனை ஒரு கூண்டில் அடைத்து வனத்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், முந்தைய நாளன்று இதே கரடி தனது சொந்தக் குட்டியையே கடித்துக் கொன்றதாகவும், தனது குட்டியின் உடல் கிடைக்காத ஆத்திரத்தில்தான் அது வழியில் இருந்தவர்கள் மீது இப்படி கொடூரமாகத் பாய்ந்ததாகவும் கிராம மக்கள் வேதனைத் தெரிவித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.