ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் செய்த தவறான கணக்கீட்டால் ஒரு தொடக்கப் பள்ளி இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 160-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ஈரானின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தின. இதில் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள ‘ஷஜாரே தயேபா’ சிறுமிகள் தொடக்கப் பள்ளியின் மீது ஏவுகணைகள் பாய்ந்தன. பள்ளி இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த கோரத் தாக்குதலில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சுமார் 160-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உடல் சிதறி பலியாகினர்.
நவீன கால போர்களில் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுகிறது. மினாப் பள்ளி விவகாரத்தில், ஏஐ தொழில்நுட்பம் அந்த இடத்தைத் தவறாகக் கணித்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கான காரணங்களாகக் கூறப்படுபவை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பள்ளி வளாகம் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளமாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பழைய தரவுகளைக் கொண்டு, ஏஐ சிஸ்டம் அந்தப் பள்ளியை இன்னும் ‘ராணுவ இலக்கு’ என்றே கருதி தாக்குதலுக்குப் பரிந்துரை செய்திருக்கலாம்.
ராணுவ முகாம்களுக்கு அருகிலேயே பொதுமக்களின் குடியிருப்புகளும் பள்ளிகளும் இருப்பதால், அங்கிருக்கும் கட்டிடங்களை ஆய்வு செய்த ஏஐ அல்காரிதம், பள்ளி கட்டிடத்தையும் ராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “அமெரிக்கா ஒருபோதும் பள்ளிகள் அல்லது மருத்துவமனைகளைத் திட்டமிட்டுத் தாக்குவதில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட விசாரணையில், ராணுவ இலக்கைத் தாக்க முயன்ற போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
போர் நடவடிக்கைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது ஆபத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். “இயந்திரங்கள் உயிர்ச் சேதம் குறித்த முடிவுகளை எடுக்கும்போது, அதில் மனிதர்களின் குறுக்கீடு இல்லாததே இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணம்” என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே காசா போரில் இஸ்ரேல் பயன்படுத்திய ‘லாவண்டர்’ (Lavender) போன்ற ஏஐ சிஸ்டம்கள் பல தவறான இலக்குகளைத் தேர்வு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஈரானில் நடந்துள்ள இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
