தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த பிரதான வாக்குறுதிகள் பல இன்னும் ஏட்டளவிலேயே இருப்பதாகக் கூறி, அரசியல் விமர்சகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பழைய வாக்குறுதிகளுக்கே ‘விடிவு’ கிடைக்காத நிலையில், 2026 தேர்தலுக்கான திமுக-வின் புதிய வியூகங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நேரத்தில் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி இளைஞர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆட்சி அமைந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதேபோல், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்குப் பதிலாக, ‘டேப்’ (Tabs) வழங்கப்படும் என திமுக அறிவித்தது. ஆனால், இன்றுவரை பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த ‘டேப்’ சென்று சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத் துறையைப் பொறுத்தவரை, நெல்லுக்கு ரூ. 2,500 மற்றும் கரும்புக்கு ரூ. 4,000 ஆதார விலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி டெல்டா விவசாயிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இன்றுவரை இந்த இலக்கை அரசு எட்டவில்லை என்பது விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருவதில் அரசு போதிய வேகம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
விவசாய நிலங்களைப் பாதுகாப்பதாகக் கூறிவிட்டு, 100 ஏக்கருக்கு மேல் உள்ள திட்டங்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023’, விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுக அரசின் மீது அரசு ஊழியர்கள் கொண்டுள்ள முக்கிய வருத்தம் ‘பழைய ஓய்வூதியத் திட்டம்'(OPS). தேர்தல் வாக்குறுதியில் ஓபிஎஸ் (OPS)அமல்படுத்தப்படும் எனக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு நிதி நிலைமையைக் காரணம் காட்டி அதிலிருந்து அரசு பின்வாங்கியது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
70 மற்றும் 80 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குரல்வளையை அரசு கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மின்கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாறாக புதிய மின் இணைப்பிற்கான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், தமிழக அரசின் அடையாளமான ‘ஆவின்’ நிறுவனத்தில் பால் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படாதது மற்றும் பால் பாக்கெட்டுகளில் தரம் குறைந்து வருவது போன்ற நிர்வாகச் சீர்கேடுகள் சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடந்த கால வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில், 2026 தேர்தலுக்காக “ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள்” உள்ளிட்ட புதிய மெகா திட்டங்களை திமுக முன்னிறுத்தி வருகிறது.
ஏற்கனவே சொன்னதைச் செய்யாதவர்கள், தற்போது புதிய கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது தேர்தல் கால தந்திரமா அல்லது இதில் ஏதேனும் நிதி முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஊழலை ஒழிக்க வலுவான ‘லோக்ஆயுக்தா’ அமைப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் மொத்தத்தில், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் திமுக அரசுக்கு, கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளின் நிறைவேற்றப்படாத நிலையே மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
