தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளத்தில்  பிளஸ் டூ மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் மெத்தனப்போக்கு பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம்  பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியில், மார்ச் 11-ம் தேதி பொதுமக்களே தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, வீட்டின் அருகிலேயே முட்புதரில் மாணவி வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தர்ம முனீஸ்வரன், ஏற்கனவே ஒரு பாலியல் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த டிசம்பரில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளான். இத்தகைய கொடூரக் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தவறிய உளவுத்துறையின் தோல்வியே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் அச்சத்தை உண்டாக்குகின்றன. அதன்படி மதுராந்தகம்: தாம்பரத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சேலம்: 66 வயது முதியவர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை: அயனாவரத்தில் ஏழு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் தலைநகரையே அதிர வைத்துள்ளது.

“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், கள நிலவரம் வேறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. விளாத்திகுளம் சம்பவத்தில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தலையிட்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள தகவல், காவல்துறை தன்னாச்சியுடன் செயல்படுகிறதா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பெருகிவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் புழக்கமே இத்தகைய வக்கிரமான குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. “குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பதில்தான் காவல்துறையின் திறமை உள்ளது. புள்ளிவிவரங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பெண்களுக்குத் தைரியமான சூழலை உருவாக்க வேண்டும்” என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது.