விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிரச்சாரத்தின் போது சசிகலா பேசியதாவது, “நான் சிறைக்குச் சென்ற தருணத்தில், தமிழகத்தில் கழக ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்திற்காக ஒருவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்துவிட்டுச் சென்றேன். அதுதான் நான் செய்த ஒரே காரியம். ஆனால், நான் சென்ற மூன்றே மாதங்களில் என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். இன்று வரை எதற்காக அந்த முடிவை எடுத்தார்கள் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. சிறையில் இருந்த எனக்கு இது மிகப்பெரிய வேதனையை அளித்தது.

தொடர்ந்து தனது சிறைவாசம் குறித்துப் பேசிய அவர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சதி நடந்ததாகக் குற்றம் சாட்டினார். நான்கு ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நான் வெளியே வரும் சமயத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிறையின் பெண்கள் பகுதியில் யாருக்குமே கொரோனா இல்லாத சூழலில், திடீரென ஒரு பெண் எனது வார்டுக்குள் நுழைந்தார். அவரை நான் அதற்கு முன் சிறையில் பார்த்ததே இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எப்படி எனது வார்டுக்குள் வந்தார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அவர் வந்து சென்ற அடுத்த நாளே எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறையில் 200-க்கும் மேற்பட்டோர் இருந்தும் எனக்கு மட்டும் 85 சதவீத பாதிப்பு ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பிறகே நான் அதிலிருந்து மீண்டு வந்தேன்,” என உருக்கமாகப் பேசினார்.

தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கும், ராமதாஸ் தலைமையிலான பாமக வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட சசிகலா, திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.