இன்றைய காலகட்டத்தில் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மக்களின் வேலை செய்யும் பாணியை முற்றிலும் மாற்றி அமைத்து வருகிறது. இமெயில் எழுதுவது முதல் ஆபீஸ் ரிப்போர்ட் தயாரிப்பது வரை பலரும் ஏஐ டூல்ஸ்களின் உதவியை நாடி வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் நாம் செய்யும் மிகச்சிறிய அலட்சியம், ஒட்டுமொத்த ரகசியத்தையும் உலகிற்கு அம்பலப்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சுவாரசியமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெண் ஊழியர் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது பாஸிற்கு இமெயில் மூலம் லீவ் கேட்டுள்ளார். அதற்கு அவரது பாஸும், “நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொண்டு நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்று மிகவும் அக்கறையான பாணியில் பதிலளித்துள்ளார். ​ஆனால், அந்த இமெயிலின் கீழே பாஸ் போட்ட டிஜிட்டல் கையெழுத்திற்கு அடியில் இருந்த, “Would you like a slightly more casual or more formal version?” (உங்களுக்கு இதன் இன்னும் கொஞ்சம் கேஷுவலான அல்லது ஃபார்மலான வடிவம் வேண்டுமா?) என்ற ஒரு ஒற்றை வரியைப் பார்த்து நெட்டிசன்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்கள் பொதுவாகக் கேட்கும் இந்த வரியை நீக்க மறந்த பாஸ், அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அனுப்பியுள்ளார் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட் எக்ஸ் (X) தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, “இன்றைய காலத்தில் ஏஐ பயன்படுத்துவது ஸ்பெல் செக் செய்வது போன்றதுதான், இதில் தவறில்லை” என்று சிலர் வாதாடினாலும், “அனுப்புவதற்கு முன்னால் ஒருமுறை கூடவா படித்துப் பார்க்க மாட்டார்கள்?” என்று பலரும் பாஸின் இந்த அலட்சியத்தைக் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.