திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், கட்டிடப் பராமரிப்புப் பணிகளுக்காக வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் செய்த விபரீத காரியம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் மீது போலீஸ் ஆக்ஷன் பாயும் அளவிற்குச் சென்று முடிந்துள்ளது. அந்த வடமாநிலப் பணியாளர், ஆட்சியர் அலுவலகத்தின் மிக முக்கிய மற்றும் பாதுகாப்பான அறையில் தான் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆசைக்காகத் தனது மொபைல் ஃபோனை எடுத்து ஒரு ரீல்ஸ் (Reels) வீடியோவை எடுத்துள்ளார்.

அதோடு நிறுத்தாமல், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். ​அரசின் உயர் அதிகாரி தங்கும் முகாம் அலுவலகத்தின் உள் அறைகள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு குளறுபடிகள் குறித்துப் பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். இந்த விவகாரம் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றதும், அவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில், “திருச்சி ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தவறுதலாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வடமாநில பணியாளர் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி நபர் மீது தற்போது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று ஸ்ட்ரிக்ட்டாகத் தெரிவித்துள்ளார்.