திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 19). இவரது காதலி யாஸ்மின் (18). இவர்களுடன் சதாம் உசேனின் நண்பர் ஷேக் அப்துல்லா (19) என்பவரும் சேர்ந்து, திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை,காதலுனுடன் உல்லாசமாக இருக்கும் போது  யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி, சதாம் உசேனும், ஷேக் அப்துல்லாவும் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு யாஸ்மினைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், யாஸ்மினின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யாஸ்மினுக்கு ‘டெபன்டாடல்’ (Tapentadol) என்ற போதை மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தியதால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை போலீசார் சோதனை செய்தபோது, அங்கிருந்து
7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கப்பட்ட நிலையில் 2 டீ கப் போதை மருந்து,
போதை மருந்து செலுத்தப் பயன்படுத்திய ஊசிகள்  ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் கொடுத்த புகாரின் பேரில், யாஸ்மினை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக காதலன் சதாம் உசேன், நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

யாஸ்மினின் இறப்பு தொடர்பாக போலீசார் தற்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் யாஸ்மின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும், அதன்பின்னரே கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இச்சம்பவத்தில் போதை மாத்திரை விற்பனைப் பின்னணி குறித்த பரபரப்புத் தகவல்களும் வெளியாகியுள்ளன. உயிரிழந்த யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் மற்றும் அவரது சகோதரர் ஜாகீர் உசேன் ஆகியோர் ஏற்கனவே போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில் அரியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த யாஸ்மினும் ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இவர்களுக்குப் போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்? இதன் பின்னணியில் உள்ள பெரிய நெட்வொர்க் எது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.