தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சரவணனின் ஆதரவோடு இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், இதனை மறைப்பதற்காக அந்தப் பெண்ணிடம் அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக எம்.எல்.ஏ.வே சமரசம் பேசியதாக வரும் செய்திகள் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். “பெண்களின் பாதுகாப்புக்காக அரசு தொடங்கியுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’யின் முதல் வழக்கே ஆளுங்கட்சிக்கு எதிரான வழக்கா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தகைய செயலுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்றுக் கொள்கிறாரா என்றும் சாடியுள்ளார்.
மேலும், “அமைச்சருக்குத் தெரியும், மேலிடத்திற்குத் தெரியும்” என்றெல்லாம் பேச்சுக்கள் எழுவது, முதல்வரையா அல்லது அவரைத் தாண்டிய பவர் சென்ட்டரையா குறிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி, அதனை மறைக்க முயன்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை பதவியை ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய முதல்வருக்கு துணிச்சல் இருக்கிறதா என வினவியுள்ள அவர், பாதிக்கப்பட்ட பெண் வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த வழக்கை எந்தவித அரசியல் இடையூறும் இன்றி நேர்மையாக விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மற்றும் அதற்குத் துணை நின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எம்.எல்.ஏ அல்லது அமைச்சராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
