உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் ‘இன்காக்னிட்டோ சாட்’ மற்றும் ‘சைட் சாட்’ ஆகிய இரண்டு புதிய மாஸ் அப்டேட்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.வாட்ஸ்அப் தளம் இன்று பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை, தனிப்பட்ட மற்றும் குழு தகவல் பரிமாற்றத்திற்கான மிக முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
இது பயனர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வரும் மெட்டா நிறுவனம், தற்போது வாட்ஸ்அப்பில் மெட்டா ஏ.ஐ பயன்படுத்தும் பயனர்களுக்காக இந்த அதிரடி பிரைவசி அம்சங்களை வடிவமைத்துள்ளது.இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது உடல்நலம், பண விவரங்கள், தனிப்பட்ட பிரச்சனைகள் அல்லது அலுவலக ரகசியங்கள் போன்ற மிகவும் முக்கியமான மற்றும் ரகசியமான விஷயங்களை, மற்றவர்கள் பார்க்க முடியாத ஒரு பாதுகாப்பான சூழலில் மெட்டா ஏ.ஐ-யுடன் பகிர்ந்து பேச முடியும்.
இந்த அம்சம் மெட்டாவின் அதிநவீன ‘பிரைவேட் பிராசசிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், பயனர்களின் இந்த உரையாடல்களை மெட்டா நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இத்துடன் ‘சைட் சாட்’ என்ற மற்றொரு புதிய வசதியையும் மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம், நாம் ஒருவருடன் வாட்ஸ்அப்பில் சாதாரண சாட் செய்துகொண்டிருக்கும் போதே, அந்த உரையாடலின் நடுவில் மற்றவர்களுக்குத் தெரியாமல், தனிப்பட்ட முறையில் மெட்டா ஏ.ஐ-யின் உதவியைப் பெற முடியும்.
பயனர்களின் தனியுரிமைக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கும் இந்த புதிய அம்சங்கள், வரும் மாதங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெட்டா ஏ.ஐ செயலிகளில் படிப்படியாகப் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
