உலகிலேயே அதிக அளவிலான நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மையான இடத்தில் உள்ளது. அந்நாட்டின் புவித்தட்டு அமைப்பே இதற்குக் முக்கியக் காரணமாகும். ஜப்பான் நாடு ‘பசிபிக் நெருப்பு வளைய மண்டலத்தில்’ அமைந்துள்ளது. பசிபிக் தட்டு, பிலிப்பைன்ஸ் கடல் தட்டு, யூரேசிய தட்டு மற்றும் வட அமெரிக்க தட்டு ஆகிய நான்கு முக்கியப் புவித்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இது அமைந்திருப்பதால், இத்தட்டுகள் நகரும்போதும் ஒன்றோடொன்று மோதும்போதும் நிலத்தடியில் பெரும் அழுத்தம் உருவாகி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, இரண்டு தட்டுகள் மோதும்போது ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் மூழ்கும் ‘உள்வாங்கல் மண்டலங்கள்’ ஜப்பானில் அமைந்துள்ளன. வட ஜப்பானில் பசிபிக் தட்டும், தென்மேற்கு ஜப்பானில் பிலிப்பைன்ஸ் கடல் தட்டும் நிலத்திற்கு அடியில் உள்வாங்கப்படுவதால் உலகின் அதிதீவிர நிலநடுக்கங்கள் இங்கு உருவாகின்றன. 2011-ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதன் தொடர்ச்சியாக வந்த பேரழிவுச் சுனாமி மற்றும் புகுஷிமா அணு உலை விபத்தும் இதற்குச் சான்றாகும். அதற்கு முன்பாக 1923-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் டோக்கியோ மற்றும் யோகோஹாமா நகரங்களைப் பெரிதும் பாதித்தது.
- இருப்பினும், நிலநடுக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த ஜப்பான், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உலகத்தரம் வாய்ந்த நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. உயரமான கட்டிடங்கள் கூட இடிந்து விழாமல் அசைந்து அதிர்வை உறிஞ்சும் ‘நிலநடுக்கத் தாங்கும் கட்டிடக்கலை’ அங்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலநடுக்க அலைகளை முன்கூட்டியே கண்டறிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அதிநவீன பூகம்ப எச்சரிக்கை அமைப்பும் செயல்பட்டு வருகிறது. ஜப்பானின் அதிவேக ‘ஷிங்கன்சென்’ ரயில்கள் பூகம்பத்தை உணர்ந்தவுடன் தானாகவே நின்றுவிடும் வசதி கொண்டவை.
தொழில்நுட்பம் மட்டுமின்றி, மக்களின் விழிப்புணர்வும் அங்குப் பேரிடர் மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவசரக் காலங்களில் பயன்படுத்துவதற்காக உணவு, தண்ணீர், மருந்துகள் அடங்கிய ‘பேரிடர் பாதுகாப்புப் பெட்டிகளை’ ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடுகளில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இயற்கை அச்சுறுத்தல்களைத் தங்களின் நவீன அறிவியல் அறிவாலும், முறையான திட்டமிடலாலும் கையாண்டு ஜப்பான் உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
