அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நள்ளிரவு முழுவதும் ஒரே ஒரு தென்னை மரத்தைப் பிடித்துக் கொண்டு விடிய விடிய மரண போராட்டம் நடத்தி உயிர் தப்பியுள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தின் சீற்றம் தீவிரமாக இருந்தபோதிலும், சற்றும் மனம்தளராமல் நள்ளிரவு முழுவதும் தென்னை மரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவர் நடத்திய போராட்டம் காண்போரை உரைய வைத்துள்ளது. திடீரென சீறிப் பாய்ந்து வந்த வெள்ள நீரால் அப்பகுதி முழுவதும் நிலைகுலைந்த நிலையில், அந்த இளைஞரால் தப்பிச் செல்ல வழி ஏதும் இல்லாமல் போயுள்ளது.
சுற்றிலும் தண்ணீர் உயர்ந்து கொண்டே வந்ததால், வேறு வழியின்றி அருகிலிருந்த ஒரு உயரமான தென்னை மரத்தின் மீது ஏறி அதைக் கட்டியணைத்துக் கொண்டார். சுற்றிலும் சுழன்றடித்த சீற்றமிக்க வெள்ள நீரினூடே, அடர்ந்த இருட்டில், கடுமையான குளிரிலும் பசியிலும் வாடியபடி அவர் விடிய விடிய அந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு உயிருக்குப் போராடியுள்ளார்.
ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அல்லது கை பிடி நழுவியிருந்தாலும் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார். விடிந்ததும், காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தென்னை மரத்தைக் கட்டியணைத்தபடி ஒரு இளைஞர் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மீட்புப் படையினரும் கிராம மக்களும் இணைந்து தீவிரமாகப் போராடி, கயிறுகள் மற்றும் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த இளைஞரைப் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். நள்ளிரவு முழுவதும் சாவின் விளிம்பில் நின்று போராடி மீண்ட அந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அதைப்பார்ப்போரைச் சிலிர்க்க வைத்து வருகிறது.
