ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா இடையிலான நீண்டகால விவாகரத்து விவகாரத்தில் தற்போது சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வந்தனர். ராணுவ அதிகாரி ராம்நாத் அவர்களின் மகளான பாயல் மற்றும் உமர் அப்துல்லா தம்பதிக்கு ஜாஹீர், ஜமீர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்களது திருமண வாழ்க்கை முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், அதனை சரிசெய்ய முடியாது என்றும் கூறி உமர் அப்துல்லா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரப்பட்டது.
முன்னதாக, குடும்ப நல நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை உமர் அப்துல்லாவின் விவாகரத்து கோரிக்கையை நிராகரித்திருந்தன. மனைவியின் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை உமர் தரப்பு நிரூபிக்கவில்லை என்றும், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உமர் அப்துல்லா தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், இரு தரப்பினரும் பரஸ்பர ஒப்புதலுடன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 142-வது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக தொடுத்திருந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கின் வாதங்களைக் கேட்ட நீதிபதி நரசிம்மா, இரு தரப்பினரின் உடன்பாட்டின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இந்தத் தகவல்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி ஆவணத்தில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம், 17 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த விவாகரத்து விவகாரத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் முறையான தீர்வு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
