நமது பாரம்பரிய வழிபாடுகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள வெற்றிலை, வெறும் வாய் சிவப்பதற்காக மட்டும் பயன்படுவதில்லை. இதய வடிவில் பளபளப்பாகக் காணப்படும் இந்த வெற்றிலையில், உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ மற்றும் நார்ச்சத்துகள் பெருமளவில் நிறைந்துள்ளன. உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், அஜீரணத்தைப் போக்கி செரிமானத்தையும், ஞாபக சக்தியையும் தூண்டும் ஆற்றல் இந்த எளிய வெற்றிலைக்கு உண்டு.
வெற்றிலையைச் சாறெடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம்பெறும். பற்களின் ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் ரத்தக் கசிவைப் போக்கி பற்களை உறுதியாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலைச் சாற்றுடன் பால் மற்றும் நீர் கலந்து பருகி வர நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைகள் காய்ச்சல் அல்லது இருமலால் அவதிப்படும் போது, கடுகு எண்ணெயில் வெற்றிலையைச் சூடாக்கி மார்பில் கட்டி வைத்தால் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.
முடி உதிர்வுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாகும். வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரும். மேலும் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளையும் இது போக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், இரண்டு வெற்றிலையில் ஐந்து மிளகு வைத்து மென்று சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கை தந்த மிகச் சிறந்த வலி நிவாரணியான வெற்றிலை, வெட்டுக்காயங்கள் மற்றும் தழும்புகளால் ஏற்படும் வலியை உடனடியாகக் குறைக்கிறது. வெற்றிலையை அரைத்துப் பாதிப்புள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். உடலின் உள்ளுறுப்புகளான மூளை, இதயம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி, புற்றுநோய் போன்ற பாதிப்புகளிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் அரிய மருத்துவக் குணங்களை வெற்றிலை தன்னகத்தே கொண்டுள்ளது.
