மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு வரவுள்ளார். அவரது இந்த திடீர் தமிழ்நாடு வருகை மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாளை காலை 10 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்தை ராகுல் காந்தி வந்தடைகிறார். அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் திரள உள்ளனர். அதைத் தொடர்ந்து, காலை 10.20 மணியளவில் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் புறப்படுகிறார்.
மாமல்லபுரத்திற்கு காலை 11.30 மணியளவில் சென்றடையும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறவுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான முக்கிய பயிற்சி கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்கான களப் பணிகள், கட்சி அமைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து மாவட்ட தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி முக்கிய அறிவுரைகளை வழங்கவுள்ளார்.
பயிற்சி கூட்டத்தை நிறைவு செய்த பிறகு, மாலை 5 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து மாலை டெல்லிக்குத் திரும்புகிறார். ராகுல் காந்தியின் இந்த ஒரு நாள் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
