ஆந்த்ரோபிக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளாட் ஃபேபிள் 5’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, நிறுவனப் பணிகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது எனத் தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை விதித்துள்ளது. அந்த ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய தரவுச் சேமிப்புக் கொள்கை காரணமாக, நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சட்டக் குழுவினர் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது புதிய ஏஐ மாடலில், பயனர்கள் கேட்கும் கேள்விகளையும் அதற்கு ஏஐ அளிக்கும் பதில்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கட்டாயமாக 30 நாட்களுக்குத் தனது சர்வரில் சேமித்து வைக்கும் புதிய கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தங்களின் மென்பொருள் குறியீடுகள் நிறுவனத் தரவுகளை இதில் பதிவிடும்போது, அவை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் வசம் 30 நாட்கள் இருக்கும் என்பதால், தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்கனவே தனது கூட்டாளி நிறுவனமான ஓபன்ஏஐ உடன் இணைந்து பல்வேறு ஏஐ சேவைகளை வழங்கி வரும் மைக்ரோசாப்ட், பாதுகாப்பு காரணங்களுக்காகப் போட்டி நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பத்திற்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
