உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமான மக்களால் டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் ‘இன்காக்னிட்டோ சாட்’ (Incognito Chat) என்ற அதிரடியான புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

வாட்ஸ்அப்பில் மெட்டா ஏ.ஐ (Meta AI) பயன்படுத்தும் பயனர்களைக் கவரும் வகையில் கொண்டு வரப்படும் இந்தத் தனியுரிமை அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களது உடல்நலம், நிதி விவரங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது மிக முக்கிய அலுவலக ரகசியங்கள் போன்ற விஷயங்களை, மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு மிக பாதுகாப்பான சூழலில் ஏ.ஐ-யுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை முக்கியத் தகவல் தொடர்பு தளமாக இருக்கும் வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​இந்த புதிய வசதியானது மெட்டா நிறுவனத்தின் அதிநவீன ‘பிரைவேட் பிராசசிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், பயனர்கள் ஏ.ஐ-யுடன் நடத்தும் ரகசிய உரையாடல்களை மெட்டா நிறுவனத்தால் கூட எக்காரணத்தைக் கொண்டும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ‘சைட் சாட்’ (Side Chat) என்ற மற்றொரு புதிய வசதியையும் மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் சாதாரண வாட்ஸ்அப் உரையாடலின் நடுவிலேயே மற்றவர்களுக்குத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் மெட்டா ஏ.ஐ-யின் உதவியை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியும். வாட்ஸ்அப் மற்றும் மெட்டா ஏ.ஐ செயலிகளில் வரவிருக்கும் மாதங்களில் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த அதிரடித் தனியுரிமை அம்சங்கள் தற்பொழுது உலகளாவிய டெக் வட்டாரத்தில் மிக ஹாட் டாபிக்காகப் பேசப்பட்டு வருகிறது!