கள்ளக்காதலுக்குத் இடையூறாக இருந்த கணவனை, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண் தனது காதலனுடன் சேர்ந்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்து, சடலத்தைக் கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் பீஹார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தை சேர்ந்த சதேந்திர சிங் என்பவரே இவ்வாறு கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் இவரது மனைவி அனிதா தேவி என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அனிதா தேவிக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த சூரஜ் சிங் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களது சட்டவிரோத உறவு பற்றி அறிந்த கணவன் சதேந்திர சிங், மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா தேவி, தனது காதலன் சூரஜ் சிங்குடன் இணைந்து கணவனைக் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று சதேந்திர சிங் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் காதலன் சூரஜ் சிங்கை வீட்டிற்கு வரவழைத்த அனிதா தேவி, இருவருமாகச் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சதேந்திர சிங்கை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை நடந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்த இருவரும், சதேந்திர சிங்கின் உடலை ஒரு மூட்டையில் கட்டி, அண்டை மாவட்டமான பாக்ஸரில் உள்ள கால்வாயில் வீசி எறிந்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஆனால், கால்வாயில் மிதந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சதேந்திர சிங்கின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அனிதா தேவி மற்றும் சூரஜ் சிங்கின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து இருவரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கணவனைக் கொலை செய்து கால்வாயில் வீசியதை அனிதா தேவி வாக்குமூலமாக அளித்தார். உடனடியாகக் காவல் துறையினர் அனிதா தேவி மற்றும் அவரது காதலன் சூரஜ் சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே தந்தையைக் கொன்று சிறைக்குச் சென்றதால், ஆதரவின்றித் தவிக்கும் 3 பிஞ்சுக் குழந்தைகளின் நிலை அப்பகுதி மக்களைப் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
