கல்விக் கூடங்கள் அறிவு புகட்டும் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் வேளையில், பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம் திலோத்து அருகே உள்ள சந்தன்புரா நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியருக்கும் சக ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுனில் குமார் என்பவர் மஞ்சள் நிறச் சட்டை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார். அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கே இருந்த ஆசிரியர் சந்தோஷ் குமார் என்பவருடன் சுனில் குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே இரு கல்வியாளர்களும் சண்டையிட்டுக் கொண்ட இந்த அதிர்ச்சி சம்பவத்தை அங்கிருந்த சக ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் தடுக்க முயன்றும், தலைமை ஆசிரியர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டார். மேலும், இந்தத் தலைமை ஆசிரியர் தினமும் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாணவனைக் கடுமையாகத் தாக்கியதாகவும் சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியில் பணி நேரம் முடிந்த பிறகு நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், துறை ரீதியான மற்றும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
