சமூக வலைத்தளப் பதிவின் மூலம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவரின் உயிரை, ‘மெட்டா’ நிறுவனத்தின் துரித எச்சரிக்கை மற்றும் போலீசாரின் சாதுரியமான நடவடிக்கை இணைந்து கடைசி நொடியில் காப்பாற்றியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Be happy in your life” (உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்) என்ற உருக்கமான வாசகத்துடன், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலை மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்பு உடனடியாகக் கண்டறிந்து, உத்திரப் பிரதேச மாநில சைபர் போலீசாருக்கு அவசர எச்சரிக்கை செய்தியை அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, சைபர் பிரிவு போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, அந்த இளைஞரின் மொபைல் போன் சிக்னல் மற்றும் ஐபி முகவரியைக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே துல்லியமாகக் கண்டறிந்தனர். உடனடியாக மீரட் உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட போலீசார், அவருக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்கி, அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக வலைத்தளங்களின் தீவிரக் கண்காணிப்பும், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையும் இணைந்து, ஒரு விலைமதிப்பற்ற இளைஞரின் உயிரைக் கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ள இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
