இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் பயணம் என்பது வெறும் இடத்தை அடைவது மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் நேரத்தை மிச்சப்படுத்தியும் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் உலகளவில் முதன்மைச் செயலியாக கூகுள் மேப்ஸ் திகழ்கிறது. பயனர்களின் பயணத்தை மேலும் புத்திசாலித்தனமாக மாற்ற பல புதிய நவீன வசதிகளைக் கூகுள் மேப்ஸ் வழங்கி வந்தாலும், அதில் உள்ள பல பயனுள்ள அம்சங்கள் இன்னும் பெரும்பாலான பயனர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன.
கூகுள் மேப்ஸில் உள்ள ‘டிஸ்டன்ஸ் மெஷர்’ என்ற தூரத்தை அளவிடும் வசதி மூலம் இரு இடங்களுக்கு இடையிலான தூரத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியும். அதேபோல், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தடுமாறுபவர்களுக்காக ‘சேவ் பார்க்கிங்’ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இணைய சேவை இல்லாத மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பயணங்களின் போது பயன்படும் வகையில், முன்கூட்டியே வரைபடத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ வசதியும் இதில் மிக முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏதுவாக, அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்கள் மற்றும் சார்ஜர் வகைகளின் நிலையைச் சுட்டிக்காட்டும் இ.வி சார்ஜிங் தேடல் வசதியும் கூகுள் மேப்பில் உள்ளது. மேலும், ‘ஸ்ட்ரீட் வியூ டைம் டிராவல்’ என்ற சிறப்பம்சம் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலை அல்லது கட்டிடம் கடந்த ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது மற்றும் தற்போது எப்படி மாறியுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியும் சில முக்கிய நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.
புதிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு அங்குள்ள உணவகங்கள், தங்குமிடங்கள், ஏ.டி.எம் மையங்கள் மற்றும் மருந்தகங்களைக் கண்டறிந்து தருவதுடன், உணவகங்களின் மெனு கார்டு மற்றும் பயனர்களின் விமர்சனங்களையும் கூகுள் மேப்ஸ் நேரடியாகக் காட்டுகிறது.
போக்குவரத்து நெரிசல் குறித்த லைவ் அப்டேட்கள் மற்றும் குரல்வழி வழிகாட்டுதல் போன்ற அம்சங்களால், கூகுள் மேப்ஸ் தற்போது சாதாரண வரைபட செயலியையும் தாண்டி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கான டிஜிட்டல் பயண உதவியாளராக உருவெடுத்துள்ளது.
