இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூகுள், கூகுள் குரோம், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஜிமெயில் கணக்கு என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகளில் பிற செயலிகள் மற்றும் இணையதளங்களில் உள்நுழைவதற்கு கூகுள் கணக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிமெயில் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு பயனருக்கும் கூகுள் நிறுவனம் 15 ஜிபி அளவிலான சேமிப்பகத்தை இலவசமாக வழங்குகிறது. ஆனால், பல ஆண்டுகள் பயன்படுத்தும் போது தேவையற்ற ஐ-மெயில்கள், புகைப்படங்கள், மொபைல் எண்கள் மற்றும் பி.டி.எப் ஆவணங்கள் கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயிலில் சேமிக்கப்பட்டு, அந்த இலவச ஸ்டோரேஜ் முழுமையாக நிரம்பி விடுகிறது.

ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால், கூடுதல் இட வசதிக்காக மக்கள் மாதந்தோறும் கூகுள் நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகிறது. அல்லது தேவையற்ற தரவுகளை அழித்து இடத்தை உருவாக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் சேர்ந்துள்ள தேவையற்ற மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து அழிப்பது மிகவும் சிரமமான காரியமாகும்.

இதற்கு ஜிமெயிலில் உள்ள தேடுபொறி மூலமாக மிக எளிதாகத் தீர்வுகாண முடியும். ஜிமெயில் தேடுதல் பகுதியில் has:attachment larger:10m என டைப் செய்து தேடினால், 10 எம்பி அளவுக்கு மேல் இடத்தைப் பிடித்துள்ள மிகப்பெரிய ஃபைல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அனைத்தும் வரிசையாக வரும். அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து, டெலிட் ஐகானைக் கிளிக் செய்து மொத்தமாக நீக்கிவிடலாம்.மேலும், பல வருடங்களுக்கு முன்பு வந்த பழைய மின்னஞ்சல்களையும் எளிதாக நீக்க முடியும்.

ஜிமெயில் தேடுபொறியில் older_than:1y ஒரு வருடத்திற்கு முந்தைய மெயில்கள் அல்லது குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பெயர்களைத் தேடலாம். அவ்வாறு வரும் பழைய மெயில்களை மொத்தமாகத் தேர்ந்தெடுத்து நீக்குவதன் மூலம், சில நிமிடங்களிலேயே பல ஜி.பி அளவிலான ஸ்டோரேஜ் இடத்தை இலவசமாகப் பெற முடியும். ஜிமெயில் வழங்கும் ‘ஆட்டோ டெலிட்’ அம்சத்தைப் பயன்படுத்தியும் தேவையற்ற மெயில்கள் தானாகவே அழியும்படிச் செய்யலாம்.