கூகுள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, அதை மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்குத் தீர்வாக ‘செல்பீ வீடியோ’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் கணக்குகள் லாக் செய்யப் பட்டாலோ அல்லது வழக்கமான தொலைபேசி எண், மீட்பு மின்னஞ்சல் போன்றவை கைவசம் இல்லாத சூழலிலோ இந்த அம்சம் பயனர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
View this post on Instagram
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், தங்கள் கூகுள் கணக்கு அமைப்புகளில் சென்று முன்னதாகவே ஒரு குறுகிய செல்பீ வீடியோவை பதிவு செய்து சேமிக்க வேண்டும். அப்போது, கூகுளின் வழிகாட்டுதலின்படி தலையை வெவ்வேறு கோணங்களில் அசைத்து முகத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பயனரின் முகம் துல்லியமாகக் கணினியில் பதிவேற்றப்பட்டு குறிப்பு வீடியோவாக சேமிக்கப்படும்.
எதிர்காலத்தில் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ அல்லது கணக்கைத் திறக்க இயலாத நிலை ஏற்பட்டாலோ, பயனர் மீண்டும் ஒரு புதிய செல்பீ வீடியோவை எடுக்க வேண்டும். கணினியானது புதிய வீடியோவையும், ஏற்கனவே சேமிக்கப்பட்ட வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்து, கணக்கிற்குச் சொந்தக்காரர் தான் என்பதை உறுதிசெய்த பிறகு கணக்கைத் திறக்க அனுமதிக்கும்.
புகைப்படங்கள் அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களைப் பயன்படுத்தி கணக்கைத் தவறாகத் திறப்பதைத் தடுக்கவே, இந்த நேரலை தலை அசைவு சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பயனர்களின் தனிநபர் தரவு பாதுகாப்புக்குக் கூகுள் முழு உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த செல்பீ வீடியோக்கள் கூகுள் சர்வர்களில் குறியாக்கம் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், பயனர் விரும்பினால் எந்த நேரத்திலும் இதை நீக்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் தகுதியுள்ள அனைத்துப் பயனர்களுக்கும் படிப்படியாகக் கிடைக்கப் பெறத் தொடங்கியுள்ளது.
