வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், சருமத்தைப் பாதுகாக்கவும், சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதா  கதிர்களிடம் இருந்து தப்பிக்கவும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால், கடைகளில் கிடைக்கும் சன்ஸ்கிரீன்களில் ‘SPF 30’ மற்றும் ‘SPF 50’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து, இதில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

இது தொடர்பாக அழகு சாதன தோல் மருத்துவரும் பட்டதாரியான டாக்டர் பவுலா ஃபக்ரேவின் கூற்றுப்படி, SPF என்பது ‘சன் புரோட்டக்‌ஷன் ஃபேக்டர்’  என்பதைக் குறிக்கிறது. அதாவது, சூரியனின் UVB கதிர்களிடம் இருந்து சன்ஸ்கிரீன் எந்த அளவிற்குப் பாதுகாப்பு தருகிறது என்பதையே இது உணர்த்துகிறது. SPF 30 சன்ஸ்கிரீன் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் சுமார் 97 சதவீதத்தைத் தடுக்கிறது. அதேவேளையில், SPF 50 சன்ஸ்கிரீன் சுமார் 98 சதவீதக் கதிர்களைத் தடுக்கிறது. எனவே, இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 1 சதவீதம் மட்டுமே ஆகும்.

அப்படியானால், நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? நீங்கள் தினமும் வீட்டிற்குள்ளேயே இருப்பவராகவோ அல்லது அலுவலகப் பணிகளுக்காகக் குறைந்த நேரமே வெயிலில் செல்பவராகவோ இருந்தால் SPF 30 போதுமானது. ஆனால், நீங்கள் அதிக நேரம் நேரடியாக வெயிலில் வேலை செய்பவராகவோ, நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவராகவோ அல்லது அதிக நேரம் பயணம் செய்பவராகவோ இருந்தால் SPF 50 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இது சற்றே கூடுதல் நேரப் பாதுகாப்பை வழங்கும்.

சன்ஸ்கிரீனின் SPF அளவை விட, அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எந்த அளவு SPF கொண்ட சன்ஸ்கிரீனாக இருந்தாலும், அதைத் தடவிய 2 முதல் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பூச வேண்டும் . மேலும், வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்கிரீனை முகம் மற்றும் வெயில் படும் தோல்பகுதிகளில் சரியாகத் தடவினால் மட்டுமே அது முழுமையான பாதுகாப்பைத் தரும்.