காலை நேரத்தை ஒரு கோப்பை சுடச்சுட காபியுடன் தொடங்குவது பலருக்கும் பிடித்தமான பழக்கம். ஆனால், “காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா?” என்ற கேள்வி பல காலமாகக் விவாதத்தில் இருந்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், காபி குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிப்பது பாதுகாப்பானது என்பது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜெர்மி லண்டன் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் இந்தக் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார் அதில், அளவோடு காபி அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபெனால்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டைச் சீராக்கி, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகின்றன. மேலும், முறையான அளவில் காபி குடிப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்? இதய நிபுணர்களின் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கோப்பை காபி (சுமார் 200 முதல் 300 மில்லிகிராம் காஃபின்) அருந்துவது இதயத்திற்கு மிகவும் உகந்தது. ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காபியில் அதிகளவு சர்க்கரை, அதிக கொழுப்புள்ள பால் அல்லது சுவையூட்டிகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பிளாக் காபி அல்லது குறைந்த அளவு பால் மற்றும் குறைந்த சர்க்கரையுடன் குடிப்பதே முழுமையான நன்மைகளைத் தரும்.
அதேவேளையில், அளவை விட அதிகமாக காபி அருந்துவது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, பதற்றம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள் அல்லது ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் தங்களது மருத்துவரை ஆலோசித்த பிறகே காபி அருந்தும் அளவை நிர்ணயிக்க வேண்டும். எதுவாகினும் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி காபிக்கும் பொருந்தும் என்பதே மருத்துவரின் கருத்தாகும்.
