வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் நாம் அமைக்கும் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் உண்டு. இடப் பற்றாக்குறை காரணமாகப் பலரும் படிக்கட்டுகளுக்குக் கீழே உள்ள காலியான இடத்தை ஏதேனும் ஒரு தேவைக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த இடத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் வீட்டின் அமைதியும் லட்சுமி கடாட்சமும் அடங்கியுள்ளன.

வாஸ்து விதிகளின்படி, படிக்கட்டுகளுக்குக் கீழே செய்யப்படும் ஒரே ஒரு சிறிய தவறு கூட, வீட்டில் பணம் தங்விடாமல் விரயமாக்கி, நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. படிக்கட்டுகளுக்குக் கீழே ஒருபோதும் வைக்கக் கூடாத பொருட்கள் சில உள்ளன. குறிப்பாக, அந்த இடத்தில் பூஜை அறை அமைப்பது, சாமி படங்களை வைப்பது மிகப்பெரிய வாஸ்து தோஷத்தை உண்டாக்கும்.

தினமும் நாம் கால்களால் மிதித்து ஏறிச் செல்லும் படிக்கட்டின் கீழ் இறைவனை வைப்பது நல்லதல்ல. அதேபோல, சமையலறை, கழிப்பறை, நீர் தொட்டிகள் அல்லது குப்பைத் தொட்டிகளை அங்கு அமைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இது வீட்டில் இருக்கும் செல்வத்தை நிலைக்க விடாமல், தேவையற்ற மருத்துவச் செலவுகளையும் கடன்களையும் உண்டாக்கும்.

அப்படியானால், படிக்கட்டுக்குக் கீழ் உள்ள இடத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்தலாம்? அந்த இடத்தை எப்போதும் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். வாஸ்து முறைப்படி, அங்கு வீட்டின் தேவையில்லாத பழைய பொருட்களைக் குவிக்காமல், இன்வெர்ட்டர், காலணி அலமாரி அல்லது சிறிய பயன்பாட்டுப் பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூமாக மாற்றிக் கொள்ளலாம். மேலும், வீட்டின் அழகை அதிகரிக்கும் அலங்காரப் பொருட்கள் அல்லது சிறிய புத்தக அலமாரியை அமைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

வீட்டில் செல்வம் பெருகவும், பொருளாதார நிலை சீராக இருக்கவும் படிக்கட்டுகளின் கீழ் உள்ள பகுதியை முறையான வாஸ்து வழிகாட்டுதலின்படி பராமரிப்பதே சிறந்தது. தேவையற்ற கழிவுகளையும் எதிர்மறை ஆற்றலையும் கொடுக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்தால், வீட்டில் லட்சுமி தேவியின் அருளால் பணப்புழக்கம் அதிகரிக்கும்; மகிழ்ச்சியும் தங்கும்.